ஸ்ரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி நரஸிம்ஹ பீடம்


தக்ஷிண அஹோபிலம் என்று மக்களால் அழைக்கப்படும் கீழப்பாவூரில் பக்தர்களுக்கு அவதாரத் திருக்கோலத்தில் பதினாறு திருக்கரங்களுடன் அருள்பாலித்து வரும் நரசிம்ஹ சுவாமியின் அனுகிரகத்துடன் 2018ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது ஸ்ரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி நரஸிம்ஹ பீடம்.
பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ஹ சுவாமி ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்தே நமது பீடத்தை நாடிவரும் பக்தர்தம் துயர் களைந்து சகல சௌபாக்கியங்களும் வழங்கி அருள்பாலித்து வருகிறார்.
கீழப்பாவூரில் அருள்பாலித்து வரும் நரஸிம்ஹ சுவாமியின் பரிபூரண அருட்கடாட்சம் பெற்று, வாழும் பிரஹல்லாதனாய் நரஸிம்ஹ சுவாமியை ப்ரத்யட்சமாய் கண்டு பூஜிக்கும் தெய்வாம்சம் நிரம்பப்பெற்ற நரசிம்ஹ உபாசகர் தவத்திரு. ஆனந்தாச்சார்யார், நமது பீடத்தை அலங்கரிக்கும் பிரஹல்லாத வரத ஸ்ரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி நரஸிம்ஹ சுவாமியை பிரதிஷ்டை செய்தருளினார். அதோடு நமது பீடத்தில் நடக்கும் ஹோமங்கள், யாகங்கள் மற்றும் பூஜைகளுக்கு வழிகாட்டியாய் இருந்து பீடத்திற்கு வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறார்.
நரஸிம்ஹ சுவாமியின் பரிபூரண அனுகிரகத்துடன் செயல்பட்டு வரும் நமது பீடத்தில், பக்தர்களின் சகலவித பாப தோஷ நிவர்த்திக்காக நரஸிம்ஹ சுவாமியின் உத்தரவின் பேரில் பீடம் ஸ்தாபிக்கப்பட்ட 2018ம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மஹா சூலினி துர்க்கா யாகம் நடைபெறுகிறது. சகல தோஷ நிவர்த்தினியாம் மஹா சூலினி துர்க்கா தேவியை வழிபடும் போது, ஏவல், பில்லி, சூனியம், நவக்கிரஹ தோஷங்கள், மன அழுத்தம், கண் திருஷ்டி போன்ற யாவும் பகலவன் கண்ட பனிபோல விலகி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும் என்று மஹா சூலினி தந்திர சாஸ்திரம் கூறுகிறது.