ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்காகத் தான் பிரதோஷத்தன்று நாம் ஈசனையும், நந்தியெம்பெருமானையும் வழிபடுகிறோம்.
இல்லத்திலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.
அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.